ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; முதலாவது ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி..!


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; முதலாவது ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி..!
x

image courtesy; twitter/ @BCCIdomestic

குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்சான் நாக்வாஸ்வல்லா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வல்சத்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

எலைட் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே குஜராத் 236 ரன்களும், தமிழ்நாடு 250 ரன்களும் எடுத்தன. 14 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் 312 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணிக்கு 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி வீரர்களுக்கு குஜராத் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி கடும் நெருக்கடி கொடுத்தனர். குஜராத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தமிழக அணி 187 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் குஜராத் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி தனது முதலாவது ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்சான் நாக்வாஸ்வல்லா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Next Story