ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதி: தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் இன்று மோதல்
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
கோவை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கால்இறுதி சுற்று இன்று முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி, நடப்பு சாம்பியன் சவுராஷ்டிராவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழக அணியில் பேட்டிங்கில் என்.ஜெகதீசன் (முச்சதம் உள்பட 775 ரன்), பாபா இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சனும், சுழற்பந்து வீச்சில் கேப்டன் சாய் கிஷோர் (7 ஆட்டத்தில் 38 விக்கெட்), அஜித் ராமும் (36 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர். ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியில் பேட்டிங்கில் புஜாரா (3 சதம் உள்பட 781 ரன்) அர்பித் வசவதா, பரேக் மன்கட்டும், பந்து வீச்சில் தர்மேந்திரசிங் ஜடேஜா, பார்த் புட்டும் சிறப்பாக ஆடுகிறார்கள்.
லீக் சுற்றில் 7 ஆட்டங்களில் ஆடி தலா 4 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என சரிசமபலத்தை காட்டியுள்ள இவ்விரு அணிகளும் தற்போது நாக்-அவுட் சுற்றில் எதிர்கொள்வதால் யாருடைய கை ஓங்கும் என்ற ஆவல் தொற்றிக் கொண்டுள்ளது. உள்ளூர் சூழல் தமிழக அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் விதர்பா-கர்நாடகா, மும்பை-பரோடா, மத்தியபிரதேசம்-ஆந்திரா அணிகள் மோதுகின்றன.