ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: பெங்கால்-சவுராஷ்டிரா இடையே 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்கால்-சவுராஷ்டிரா இடையே 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
கொல்கத்தா,
முன்னாள் சாம்பியன்களான பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த சவுராஷ்டிரா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பெங்கால் அணிக்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது. 65 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை தாரைவார்த்து பரிதவித்த அந்த அணி மூன்று இலக்கத்தை தொடுமா? என்று கேள்விக்குறி எழுந்தது.
இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு ஷபாஸ் அகமதுவும் (69 ரன்கள்), அபிஷேக் போரெலும் (50 ரன்) இணைந்து அரைசதத்தை கடந்ததோடு, தங்களது அணி கவுரவமான நிலையை எட்டவும் உதவினர். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 54.1 ஓவர்களில் 174 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சவுராஷ்டிரா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெய்தேவ் உனட்கட், சேத்தன் சகாரியா தலா 3 விக்கெட்டும், சிராக் ஜானி 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் தர்மேந்திரசிங் ஜடேஜா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி நேற்றைய முடிவில் 17 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய் ஹோகில் 6 ரன்னிலும், விஷ்வராஜ் ஜடேஜா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஹர்விக் தேசாய் 38 ரன்னுடனும், சேத்தன் சகாரியா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பெங்கால் தரப்பில் முகேஷ் குமார், ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.