இந்திய அணிக்காக அறிமுகமாகாமல் பிளே ஆப் போட்டியில் சதம் - ரஜத் படிதார் புதிய சாதனை
ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
டு பிளெசிஸ், கோலி, மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் சோபிக்கவில்லை. ஆனால் பெங்களூரு அணியின் இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் படிதார் சிதறடித்தார்.
இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளே ஆப் போட்டியின் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றுள்ளார்.