ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எ.ல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்து தற்போதே பல்வேறு பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.
அதோடு அடுத்த ஆண்டு ஐ.பி.எ.ல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்னதாக பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சீசனுக்கு முன்னதாகவே தங்களது அணிகளை சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்த பதவியில் இருந்து நீக்கியது.
மேலும் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்கக்கரா விலக உள்ளதாகவும், டிராவிட் அந்த பதவிக்கு வர உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின்முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.