பிரதோஷ் ரஞ்சன் அதிரடி; திருப்பூர் அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக்


பிரதோஷ் ரஞ்சன் அதிரடி; திருப்பூர் அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக்
x

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் சேர்த்துள்ளது.

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சந்தோஷ் குமார் மற்றும் ஜகதீசன் களமிறங்கினர். இதில் சந்தோஷ் குமார் 8 ரன்களில் போல்ட் ஆனதை தொடர்ந்து, அடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் பாபா அபராஜித் களமிறங்கினார். மறுபுறம் ஜெகதீசன் 36 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பாபா அபராஜித் 9 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் அண்ட்ரே சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். இதில் அண்ட்ரே சித்தார்த் 23 ரன்களில் நடராஜன் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். 46 பந்துகளில் 8 பவுண்டரிகைகளை விளாசிய பிரதோஷ் ரஞ்சன், இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திருப்பூர் அணி விளையாடி வருகிறது.


Next Story