'பிளே-ஆப்' சுற்று மழையால் பாதித்தால் சூப்பர் ஓவர் முறையில் முடிவு
கொல்கத்தாவில் பலத்த மழை பெய்து வருவதால் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கு வருணபகவான் வழிவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதே மைதானத்தில் நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன. 2-வது தகுதி சுற்று ஆட்டம் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கிறது. அதே மைதானத்தில் இறுதிப்போட்டி 29-ந் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்று நாள் உண்டு. மற்ற போட்டிகளுக்கு மாற்று நாள் எதுவும் கிடையாது. இறுதிப்போட்டி மழையால் தடைபட்டால் அடுத்த நாளில் (30-ந் தேதி) நடைபெறும்.
தற்போது கொல்கத்தாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கு வருணபகவான் வழிவிடுவாரா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அணிகளின் வெற்றி, தோல்வியை எப்படி முடிவு செய்வது? என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதன்படி தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் மழையால் பாதிப்பட்டால், அந்த நாளில் கூடுதல் நேரத்துக்குள் 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என்றும் அதற்கு வழியில்லை என்றால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் லீக் சுற்று புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலை பெற்றதோ? அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இறுதிப்போட்டி பாதியில் தடைபட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் முந்தைய நாளில் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும். மாற்று நாளிலும் இறுதிப்போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு, சூப்பர் ஓவர் முறையும் கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் லீக் சுற்று புள்ளி பட்டியல் முன்னிலையை கணக்கில் கொண்டு சாம்பியன் யார்? என்பது தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.