பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்த பில் சால்ட்- 6-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3-3 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.
லாகூர்,
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கும் நிலையில், 6வது டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் ஆடாததால் அறிமுக வீரர் முகமது ஹாரிஸ், பாபர் அசாமுடன் தொடக்க வீரராக களமிறங்கினர். ஹாரிஸ் 7 ரன்களுக்கும், ஷான் மசூத் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஹைதர் அலி 18 ரன்களும், இஃப்டிகார் அகமது 31 ரன்களும் அடித்தனர். ஆசிஃப் அலி 9 ரன்கள் மட்டுமே அடித்தார்.
ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். தொடக்கம் முதலே பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பாபர் அசாம். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் சால்ட் உடன் மலான் ஜோடி சேர்ந்தார்.
ஒருபுறம் மலான் நிலைத்து நின்று விளையாட மறுபுறம் சால்ட் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 9.3 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்திருந்த போது மலான் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதை தொடர்ந்து பென் டக்கெட்- பில் சால்ட் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. பில் சால்ட் 41 பந்துகளில் 87 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-3 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் 7-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.