தாயகம் திரும்பிய பதிரனா மற்றும் தீக்ஷனா...காரணம் என்ன தெரியுமா..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களான பதிரனா மற்றும் தீக்ஷனா தாயகம் திரும்பியுள்ளனர்.
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.
இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் குறைந்தது 3-ல் வெற்றி பெற்றால் அந்த அணி எந்த வித சிக்கலுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும்.
இந்த சூழலில் சென்னை அணியில் இடம் பிடித்திருந்த இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா ஆகியோர் தற்போது நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இலங்கைக்கு சென்ற காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் அவர்கள் விளையாட இருப்பதினால் பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான பணிகளுக்காகவே அவர்கள் அங்கு சென்று இருக்கிறார்கள். அந்த செயல்முறைகள் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சென்னை அணியுடன் இணைவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.