பாண்ட்யா சவால்களை விரும்பக்கூடியவர்...மக்கள் அவரை விரைவில் நேசிக்க தொடங்குவார்கள் - இஷான் கிஷன்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு நிர்ணயித்த 197 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் இஷான் கிஷன் 69 ரன், சூர்யகுமார் யாதவ் 52 ரன் எடுத்தனர்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா சாதாரண வீரராக விளையாடி வருகிறார். வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்ட்யா தலைமையில் களம் இறங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. தற்போது 2 ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை கேப்டனாக நியமனம் செய்ததை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் மும்பை அணி ஆடும் மைதானங்களில் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நடப்பி ஐ.பி.எல் தொடரில் ரசிகர்களின் வெறுப்புக்கு பாண்ட்யா ஆளானபோதிலும், அவர் ரசிகர்களின் அன்பை பெறும் சவாலை விரும்புவதாக இஷான் கிஷன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பாண்ட்யா சவால்களை விரும்பக்கூடியவர். இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளில் அவர் இருந்துள்ளார். பாண்ட்யா வெளிப்படையாக இதனை செய்யுங்கள், செய்யாதீர்கள் என சொல்பவர் கிடையாது. ரசிகர்களின் வெறுப்பை அவர் கண்டிப்பாக சவாலாக எடுத்துகொண்டு மகிழ்ச்சியாக விளையாடுவார். சவால்களை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறார். ஏனெனில் ரசிகர்கள் மீது குறை கூறமுடியாது. அவ்வாறு கூறினால் அவர்கள் அவர்களது செயல்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பாண்ட்யாவைப் பற்றி தெரிந்ததால், அவர் கண்டிப்பாக ரசிகர்களின் வெறுப்பினை மகிழ்ச்சியுடன் சவாலாக எடுத்துக் கொண்டு பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதன்பிறகு ரசிகர்கள் அவரை மீண்டும் நேசிக்க தொடங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.