பாண்ட்யா, பும்ரா, இல்லை..இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவருக்கே வாய்ப்பு அதிகம் - ரெய்னா


பாண்ட்யா, பும்ரா, இல்லை..இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவருக்கே வாய்ப்பு அதிகம் - ரெய்னா
x

image courtesy: PTI

தினத்தந்தி 22 April 2024 2:39 PM IST (Updated: 22 April 2024 3:39 PM IST)
t-max-icont-min-icon

பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோரை தாண்டி இளம் வீரர் ஒருவரையே அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியானது எம்.எஸ். தோனியின் தலைமைக்கு பின் மற்ற கேப்டன்களின் தலைமையில் ஐ.சி.சி. கோப்பைகளை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. ரோகித் தலைமையில் கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா இரண்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது.

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு ஆகியோர் இந்திய அணியை தீவிரமாக வலுப்படுத்தும் நோக்கில் தங்களது வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்தே டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி கட்டமைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையை ஒருவேளை தவறவிடும் பட்சத்தில் நிச்சயம் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் அடுத்த கேப்டன் வாய்ப்பிற்கான போட்டியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் என ஏகப்பட்ட வீரர்கள் வரிசையில் நிற்கும் வேளையில் இளம் வீரர்கள் பலரும் கேப்டன்சி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டு வரும் வேளையில் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோரை தாண்டி இளம் வீரர் ஒருவரையே அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சுப்மன் கில் கேப்டனாக நன்றாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார். தற்போது 23 வயதான அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடுத்ததாக நீண்ட ஒரு கேப்டன் பயணத்திற்கான தேர்வாக அவர் சரியாக இருப்பார் என்பதால் அவரே இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story