டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் பாகிஸ்தான்....மற்றொரு முன்னணி வீரர் ஓய்விலிருந்து திரும்புகிறார்
ஓய்வில் இருந்து விடுபட்டு மீண்டும் விளையாட முடிவு செய்து இருப்பதாக முகமது அமீர் அறிவித்துள்ளார்.
கராச்சி,
'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் சிக்கி 5 ஆண்டு தடைவிதிக்கப்பட்டு மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தான் ஓய்வில் இருந்து விடுபட்டு மறுபடியும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடிவு செய்து இருப்பதாக முன்னணி வீரரான முகமது அமீர் சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த அவர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணிக்காக தன்னால் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையை குறிவைத்து திரும்பும் அவர், மீண்டும் அணியில் இடம்பெற்றால் அது நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு வலுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.