எங்கள் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் - டு பிளெஸ்சிஸ் பேட்டி


எங்கள் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் - டு பிளெஸ்சிஸ் பேட்டி
x

Image Courtesy: AFP 

பெங்களூரு தரப்பில் வில் ஜேக்ஸ் 100 ரன், விராட் கோலி 70 ரன் எடுத்தனர்.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 16 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் வில் ஜேக்ஸ் 100 ரன், விராட் கோலி 70 ரன் எடுத்தனர். அதிரடியாக ஆடி சதம் அடித்த வில் ஜேக்ஸ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையிலேயே இந்த மைதானம் ரன் குவிப்பிற்கு ஏற்ற மைதானம் என்பதை நான் புரிந்து கொண்டேன். நாங்கள் முதலில் பந்துவீசும் போது 200 ரன்களை விட்டுக் கொடுத்தும் எங்களால் அதை சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். ஆனால் அதனை 16 ஓவர்களில் இவ்வளவு விரைவாக முடிப்போம் என்று நினைக்கவில்லை.

இருந்தாலும் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் நல்ல நம்பிக்கையுடன் விளையாடி வருகிறோம். எங்களது அணியின் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஸ்கோரை பார்க்கும்போது பவுலர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்கத் தோன்றும் ஆனால் விசயம் அப்படி அல்ல. டி20 கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. குறிப்பாக தற்போதெல்லாம் 220 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் அது வெற்றிக்கான ஸ்கோராக உள்ளது. இந்த ஆட்டத்தில் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story