நானும் ரோகித்தும் மட்டுமே அந்த உலக சாதனையை படைத்துள்ளோம் - ஷகிப் அல் ஹசன் பெருமிதம்
ரோகித் சர்மா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் மட்டுமே இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக்கோப்பைகளிலும் விளையாடிய வீரர்களாக உலக சாதனை படைத்துள்ளனர்.
நியூயார்க்,
20 அணிகள் கலந்துகொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (இந்திய நேரப்படி ஜூன் 2) ஆரம்பமாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக இன்று மோத உள்ளது.
முன்னதாக வங்காளதேசம் சமீபத்தில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் அதன் சொந்த மண்ணில் 2 - 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ள வங்காளதேசம் இம்முறையும் லீக் சுற்றைத் தாண்டி சூப்பர் 8 தகுதி பெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
அந்த நிலையில் 37 வயதாகும் நட்சத்திர வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் அடுத்த டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. அதே போல 37 வயதாகும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் மட்டுமே 2007 முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக்கோப்பைகளிலும் விளையாடிய வீரர்களாக உலக சாதனை படைத்துள்ளனர். அதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவிக்கும் ஷகிப் அல் ஹசன் கடந்த தொடர்களை விட இந்த டி20 உலகக்கோப்பையில் வங்காளதேசம் சிறந்த செயல்பாடுகளை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் அவர் 2026 டி20 உலகக்கோப்பையிலும் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"முதலில் நான் விளையாடத் துவங்கியபோது இவ்வளவு காலம் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. 2-வதாக நானும் ரோகித் சர்மாவும் மட்டுமே இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலக கோப்பைகளிலும் விளையாடியுள்ளோம். அது எனக்கு பெருமையாகும்.
நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் இன்னும் ஒரு டி20 உலகக்கோப்பையில் நான் வங்காளதேசத்துக்காக சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன். இம்முறை கடந்த தொடர்களை விட வங்காளதேசம் சிறப்பாக விளையாடும். என்னுடைய பெயருக்கு பின்னால் எதையும் இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. வங்காளதேச அணிக்காக இந்த உலகக்கோப்பை வெற்றிகளில் பங்காற்றுவதை மட்டுமே நான் விரும்புகிறேன். நிறைய வங்காளதேச ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதை பயன்படுத்தி நாங்கள் நல்ல முடிவுகளை கொடுப்போம்" என்று கூறினார்.