2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்திடம் பணிந்தது பாகிஸ்தான்
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது.
ஹாமில்டன்,
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பின் ஆலென் 74 ரன்கள் (41 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன் எடுத்த நிலையில் வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறினார்.
அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 173 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாபர் அசாம் (66 ரன்), பஹர் ஜமான் (50 ரன்), கேப்டன் ஷகீன் ஷா அப்ரிடி (22 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டும், டிம் சவுதி, பென் சியர்ஸ், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது 20 ஓவர் போட்டி டுனெடினில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.