அவரிடம் உள்ள அனுபவத்தை எதுவும் முறியடிக்க முடியாது - இந்திய வீரரை பாராட்டிய ரோகித் சர்மா


அவரிடம் உள்ள அனுபவத்தை எதுவும் முறியடிக்க முடியாது -  இந்திய வீரரை பாராட்டிய ரோகித் சர்மா
x

Image Courtesy: AFP 

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது,

போட்டியில் வெற்றி பெற ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நான் உள்பட 11 பேரும் பங்காற்ற வேண்டும். அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் போட்டியில் முக்கிய பங்காற்ற போகின்றார்கள். ஆனாலும், அனைவரும் அவர்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.

வங்காளதேசம் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டிக்கு முன்பு அவர் போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும், மிக முக்கிய தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர் விராட். அந்த அனுபவத்தை எதுவும் முறியடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story