கோலி அல்ல...அவர்தான் எலிமினேட்டரில் ஆர்.சி.பி-யை வெற்றி பெற வைக்கப் போகிறார் - வாசிம் அக்ரம்


கோலி அல்ல...அவர்தான் எலிமினேட்டரில் ஆர்.சி.பி-யை வெற்றி பெற வைக்கப் போகிறார் - வாசிம் அக்ரம்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 21 May 2024 2:37 PM IST (Updated: 21 May 2024 4:27 PM IST)
t-max-icont-min-icon

அவர் தான் எலிமினேட்டரில் ஆர்.சி.பி-யை வெற்றி பெற வைக்க போகிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

பிளே ஆப் சுற்றில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இதே மைதானத்தில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

அந்தப் போட்டியில் வழக்கம் போல பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி ராஜஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எலிமினேட்டர் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக பெங்களூரு அணியை வெற்றி பெற வைப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக பரிசு கிடைக்கும். கிளென் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக நாக் அவுட் போட்டியில் ஆர்.சி.பி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார். எனவே அவரைப் பொறுத்த வரை, நீங்கள் உடைமாற்றும் அறையில் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

தற்போதைக்கு நல்ல பார்மில் இல்லாதது அவருக்கும், ஆர்.சி.பி அணிக்கும் விரக்தியை கொடுக்கும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் ஆஸ்திரேலியர்களை பற்றி எனக்குத் தெரியும். குறிப்பாக மேக்ஸ்வெல் எந்தளவுக்கு போட்டி மிகுந்தவர், எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்பட விரும்புபவர் என்பது எனக்குத் தெரியும்.

2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவருடைய ஆட்டத்தை நினைத்துப் பாருங்கள். தசைப் பிடிப்பால் நடக்க கூட கஷ்டப்பட்ட அவர் ஒற்றை ஆளாக விளையாடி 200 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் அசாத்தியமான வெற்றியை பெற்றதால் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும்.

நானும் ஆர்.சி.பி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்று சொன்னேன். அசாத்தியம் என்று சொல்லவில்லை. இருப்பினும் அனைவரையும் தவறு என்று நிரூபித்த ஆர்.சி.பி-யின் கதை அற்புதமானது. அந்த போட்டி ஐ.பி.எல் வரலாற்றில் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story