'எனது பந்து வீச்சில் கோலியை தவிர யாராலும் அந்த சிக்சர் அடித்திருக்க முடியாது' - பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவுப் பேட்டி


எனது பந்து வீச்சில் கோலியை தவிர யாராலும் அந்த சிக்சர் அடித்திருக்க முடியாது - பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவுப் பேட்டி
x

‘எனது பந்து வீச்சில் கோலியை தவிர யாராலும் அந்த சிக்சர் அடித்திருக்க முடியாது என்று பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவுப் கூறினார்.

கராச்சி,

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபரில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் இந்திய அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. மெல்போர்னில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி 82 ரன்கள் (53 பந்து) விளாசி 160 ரன் இலக்கை விரட்டிப்பிடிக்க உதவினார். இதில் 19-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப்பின் அதிவேக பந்துவீச்சில் சற்று எழும்பி வந்த பந்தை கோலி நேர்திசையில் அலாக்காக சிக்சருக்கு விரட்டியது மெய்சிலிர்க்க வைத்தது. எப்படி இந்த மாதிரி ஒரு சிக்சர் அடித்தார் என்று அனைவரும் வியந்து பேசினார்கள். அடுத்து 'பைன்லெக்' திசையில் அடித்த சிக்சரும் மறக்க முடியாது.

இது குறித்து முதல்முறையாக பேசியுள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பையில் கோலி விளையாடிய விதம், ஷாட்டுகள் எல்லாமே தனித் தரம் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக அந்த சிக்சர்களை அவர் அடித்த விதத்தை போல் வேறு எந்த வீரராலும் அடித்திருக்க முடியாது. ஒரு வேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இது மாதிரி என்னுடைய பந்து வீச்சில் சிக்சர் அடித்திருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது கோலியின் பேட்டில் இருந்து வந்தது. அது தான் அவருக்கும் மற்றவர்களுக்குமான ஆட்ட தரத்தில் உள்ள வித்தியாசம்' என்றார்.

மேலும் அவர், '2018-19-ம் ஆண்டு சிட்னியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய போது நான் அங்கு கிளப் கிரிக்கெட்டில் விளையாடி வந்தேன். அப்போது வலை பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு பவுலிங் செய்தேன். கோலி, லோகேஷ் ராகுல், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரை சந்தித்து பேசியது உற்சாகம் அளித்தது. உலக கோப்பை போட்டியின் போது, 'வலை பயிற்சியில் எங்களுக்கு பந்து வீசி இருக்கிறீர்கள். இப்போது சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று கோலி என்னை பாராட்டினார்' என்றார்.


Next Story