சச்சின், சேவாக் இல்லை... பவுலிங் போட விரும்பாத இந்திய வீரர் இவர்தான் - இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓபன் டாக்
கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடருக்கு பின் சொந்த மண்ணில் இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காத இந்தியா தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012-ல் நடந்ததுபோல் இம்முறையும் இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது. முன்னதாக 2012இல் இந்தியாவை தோற்கடிக்க கிரேம் ஸ்வான் மற்றும் மான்டி பனேசர் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்துக்கு துருப்பு சீட்டாக இருந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தான் பந்துவீச விரும்பாத இந்திய வீரர் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "விராட் கோலியை கூட அத்தொடரின் முதல் போட்டியிலேயே நான் அவுட்டாக்கினேன். நீங்கள் நல்ல பந்துகளை வீசினால் கண்டிப்பாக அவரை அடிக்கடி அவுட் செய்ய முடியும். ஆனால் அந்த தொடரில் நான் பந்து வீச விரும்பாத ஒரு பேட்ஸ்மேனாக புஜாரா இருந்தார். ஏனெனில் அவர் தன்னுடைய காலில் வேகமாக செயல்படக் கூடியவர். அந்த சமயத்தில் இருந்த இந்திய அணியை இப்போது நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது. ஏனெனில் அப்போது சச்சின், விவிஎஸ் லட்சுமணன், வீரேந்திர சேவாக் மற்றும் விராட் கோலி ஆகியோர் இருந்தனர். ஆனால் அந்த பேட்ஸ்மேன்களில் புஜாராவுக்கு எதிராக மட்டும் நான் பந்து வீச விரும்ப மாட்டேன்" என்று கூறினார்