நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும்..- ரோகித், சூர்யகுமார் யாதவை விமர்சித்த சேவாக்
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 7 விக்கெட்டுகள் இழப்ப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
முன்னதாக இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக பந்துகள் எதிர்கொண்டு குறைந்த ரன்களில் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் தரமான பந்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்களை சேவாக் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"யார் நன்றாக பந்து வீசினாலும் அவர்களை நீங்கள் மதித்து விளையாட வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகள் விழாமல் போயிருந்தால் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஒரு ஓவர் முன்னதாகவே போட்டியை முடித்திருப்பார்கள். இருப்பினும் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ரசல், ஸ்டார்க் ஆகியோர் நன்றாக பந்து வீசினார்கள். எனவே நீங்கள் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு விக்கெட்டை விடாமல் விளையாடியிருந்தால் மும்பை வென்றிருக்கும்.
நீங்கள் பேட்டிங் செய்ய வரும்போது ஈகோவுடன் வரக்கூடாது. ஒன்று சாதாரணமாக எதிர்கொள்ள வேண்டும் அல்லது மோசமான பந்தை தண்டிக்க வேண்டும். ஆனால் நன்கு செட்டிலான பின்பு ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் குறைந்தது 5 பவுண்டரிகள் அடித்திருக்க வேண்டும். நீங்கள் ரோகித் சர்மா அல்லது சூரியகுமாராக இருக்கலாம். ஆனால் பவுலரை மதிக்காவிட்டாலும் குறைந்தது நீங்கள் நல்ல பந்துகளை மதிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் தரமான பந்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.