பும்ரா, ஷமி இல்லை.. அந்த 2 பவுலர்களை சமாளித்தால் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெறும் - மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய மண்ணில் பொதுவாகவே வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய மண்ணில் பொதுவாகவே வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய தரமான அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தான் தங்களுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். அவர்களுடைய ஆட்டமே இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் மேக்ஸ்வெல் கணித்துள்ளார். குறிப்பாக அஸ்வின் - ஜடேஜா சமயத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் டாப் 2 ஆல் ரவுண்டர்களாக ஜொலித்து வருகிறார்கள். எனவே ஏதேனும் ஒரு துறையில் அவர்கள் இந்தியாவுக்கு பலமாகவும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாகவும் இருப்பார்கள் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அஸ்வின், ஜடேஜா போன்றவர்களுக்கு எதிராக நீண்ட காலமாக நாங்கள் விளையாடி வருகிறோம். அவர்களை நாங்கள் எப்போதும் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறோம். பெரும்பாலும் அவர்களுடன் நாங்கள் நடத்திய போட்டி தான் வெற்றி முடிவை நிர்ணயித்திருக்கின்றன. ஒருவேளை அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடினால் நாங்கள் நல்ல நிலையில் இருப்பதை கண்டறிய முடியும்.
கிட்டத்தட்ட ஒரே வயதில் உள்ள அவர்கள் என்னுடைய கெரியரில் பெரும்பாலும் இந்திய அணியில் இருந்து வருகிறார்கள். அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா சமீப காலங்களில் அசத்தி வருகிறார். முதல் முறையாக 2013 ஐபிஎல் தொடரில் மும்பையில் அவரை பார்த்த நான் தினந்தோறும் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டேன். அங்கிருந்து அவர் இன்று 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலராக பரிணமிப்பதை பார்ப்பது அற்புதமான கதை" என்று கூறினார்.