'கேப்டன் பதவியால் கூடுதல் நெருக்கடி இல்லை'- நிதிஷ் ராணா சொல்கிறார்..


கேப்டன் பதவியால் கூடுதல் நெருக்கடி இல்லை- நிதிஷ் ராணா சொல்கிறார்..
x

கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை வருகிற 1-ந்தேதி மொகாலியில் எதிர்கொள்கிறது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராணா கூறுகையில்,

'கேப்டன்ஷிப் எனக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2-3 ஆண்டுகளாக அணித் தலைவருக்கான குரூப்பில் நானும் அங்கம் வகித்திருக்கிறேன். இதுவரை கள வியூகம் வகுக்கும் குரூப்பில் ஒரு பகுதியாக இருந்த நான் இனி தனியாக கேப்டனாக செயல்படப்போகிறேன்.

கேப்டன் பதவி என்பது ஒரு அடையாளம் அவ்வளவு தான். இதை கூடுதல் நெருக்கடியாக எடுத்துக் கொள்ளமாட்டேன். பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன்.

முதல்தர கிரிக்கெட்டோ அல்லது ஐ.பி.எல். போட்டியோ வீரர்களை திறம்பட கையாளுவது தான் முக்கியம். ஏனெனில் வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் வீரர்களை சரியாக ஒருங்கிணைத்து விளையாட வேண்டும்.

அணியின் மூத்த வீரர்கள், பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் எனக்கு உதவிகரமாக இருப்பார்கள். அவர்களின் உதவியுடன் அணியை சிறப்பாக வழிநடத்துவேன் என்று நம்புகிறேன்.

கேப்டன்ஷிப்பில் யாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்கிறீர்கள். நான் யாரையும் முன்மாதிரியாக பின்பற்றுவதில் முன்னுரிமை கொடுக்க மாட்டேன். கேப்டன்ஷிப்பில் எனக்குரிய ஸ்டைலில் செயல்பட விரும்புகிறேன்.' என்றார்.

கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை வருகிற 1-ந்தேதி மொகாலியில் எதிர்கொள்கிறது.


Next Story