இதுபோல் ஒருபோதும் பார்த்தது கிடையாது - குல்பாடின் செயல் குறித்து மார்ஷ்


இதுபோல் ஒருபோதும் பார்த்தது கிடையாது - குல்பாடின் செயல் குறித்து மார்ஷ்
x

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் ஆட்டத்தினிடையே குல்பாடின் நைப் தசை பிடிப்பு ஏற்பட்டதுபோல் மைதானத்தில் விழுந்தார்.

கிங்ஸ்டவுன்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தின் 12-வது ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், மழை வருவதுபோல் இருப்பதால் பந்து வீச்சை தாமதப்படுத்தும் படி தங்கள் வீரர்களுக்கு சைகை செய்தார். அந்த நேரத்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டதாக தரையில் விழுந்து நடித்தார். ஆனால் அவர் சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு திரும்பினார். அவரது இந்த செயலை பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறுகையில், 'இது ஒரு வேடிக்கையான சம்பவமாகும். கிரிக்கெட் களத்தில் இதுபோல் ஒருபோதும் பார்த்தது கிடையாது. குல்பாடின் நைப்பின் இந்த செயலை பார்த்து சிரித்ததில் எனக்கு ஏறக்குறைய கண்ணீரே வந்து விட்டது. ஆனால் இது ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த ஆட்டத்தை நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்தோம்.

இந்த அற்புதமான ஆட்டத்தில் நிறைய சுவாரசியமும், திருப்பங்களும் இருந்தன. இந்த தொடரில் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அதற்கு எங்கள் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. அதற்காக நாங்கள் எங்கள் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியும். ஆப்கானிஸ்தான் அணி எங்களையும், வங்காளதேசத்தையும் தோற்கடித்தனர். இதனால் அவர்கள் அரைஇறுதியில் விளையாட தகுதியானவர்கள்' என்றார்.


Next Story