டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த நடராஜன்


டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த நடராஜன்
x

image courtesy:AFP

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் அந்த அணியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை விட நடப்பு ஐ.பி.எல். தொடரில் நடராஜன் குறைந்த எக்கனாமியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இணைக்காத தேர்வுக் குழு கலீல் அகமது, ஆவேஷ் கானை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் தேர்வுக்கான விவாதத்தில் தம்முடைய பெயர் இருப்பதே பெரிய விஷயம் என்று நடராஜன் கூறியுள்ளார். மேலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவது தம்முடைய கையில் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"தேர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தையில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதற்காகவே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். 3 வருடங்கள் கழித்து தேர்வுக்குழுவினர் என்னை தேர்வுக்கு கருதுகின்றனர். என்னுடைய தேர்வை பற்றி இங்கே பேச்சுக்கள் காணப்படுகின்றன. நான் தேர்வு செய்யப்படுகிறேனா இல்லையா என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை.

இருப்பினும் அதற்கான விவாதத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதே என்னைப் பொறுத்த வரை ஒரு சாதனையாகும். ஒரு கட்டிடத்தின் உயரத்திற்கு செல்ல வேண்டுமெனில் நீங்கள் ஒவ்வொரு படியாக அடி எடுத்து வைக்க வேண்டும். தற்போது எனது திட்டங்களை செயல்முறையாக்கி ஐதராபாத் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகிறேன். உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் போனதற்காக நான் டிஸ்டர்ப் ஆகவில்லை. எது நடக்குமோ அது நடக்கும் என்று நான் எப்போதும் நம்புவேன்" எனக் கூறினார்.


Next Story