நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர் - பேட் கம்மின்ஸ் பேட்டி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடராஜன் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றிக்கு ஐதராபாத் அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமார் முக்கிய காரணமாக அமைந்தாலும், மிடில் ஓவர்களில் நடராஜனின் கட்டுக்கோப்பான பவுலிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது. சிறப்பாக பவுலிங் செய்த நடராஜன் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் பர்பிள் கேப்பையும் நடராஜன் வென்றார்.
இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயம் இந்த போட்டி அற்புதமான ஒன்றாக அமைந்தது. இதுதான் டி20 கிரிக்கெட். என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். புவனேஷ்வர் குமார் சிறப்பாக கடைசி பந்தை வீசினார். நாங்கள் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தோம்.
எங்கள் அணியின் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பவுலராக இருக்கிறார். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் தவறு காரணமாக எங்களுக்கு முக்கியமான விக்கெட்டுகள் கிடைத்தது. இந்த மைதானத்தில் சில போட்டிகளை விளையாடியுள்ளதால், 202 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று நினைத்தேன். எங்கள் பேட்டிங்கில் நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடினார். பீல்டிங் மற்றும் பவுலிங்கிலும் அவரால் பங்களிக்க முடிவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.