நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு - ஆட்ட நாயகன் மயங்க் யாதவ்
லக்னோ தரப்பில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெங்களூரு,
ஐ.பி.எல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் டிகாக் 81 ரன், பூரன் 40 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி லக்னோவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 19.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக லோம்ரோர் 33 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மயங்க் யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற மயங்க் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது, 2 போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. அந்த இரண்டிலும் நாங்கள் வெற்றி பெற்றதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும். அந்தப் பயணத்தில் இது வெறும் துவக்கம் என்று நான் உணர்கிறேன்.
கேமரூன் கிரீன் விக்கெட்டை எடுத்ததை நான் சிறப்பானதாக கருதினேன். வேகமாக பந்து வீசுவதற்கு கட்டுப்பாடான உணவுகள் (டயட்), தூக்கம் மற்றும் பயிற்சி போன்ற பல்வேறு அம்சங்கள் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக என்னுடைய டயட்டில் அதிக கவனம் செலுத்தும் நான் போட்டி முடிந்ததும் தண்ணீர் குளியல் போட்டு புத்துணர்ச்சியடைவதில் கவனம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.