நான் சிறப்பாக செயல்பட அந்த 2 இந்திய ஜாம்பவான்கள்தான் காரணம் - ஆப். வீரர் குர்பாஸ்


நான் சிறப்பாக செயல்பட அந்த 2 இந்திய ஜாம்பவான்கள்தான்  காரணம் - ஆப். வீரர் குர்பாஸ்
x
தினத்தந்தி 21 Jan 2024 1:58 PM IST (Updated: 21 Jan 2024 2:01 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

அந்த வகையில் முதல் சூப்பர் ஓவரின்போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் 2-வது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அதில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அசத்திய குர்பாஸ் 50 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு போராடினார்.

சமீப காலங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய ஜாம்பவான் வீரர்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் ஐபிஎல் தொடரின்போது நேரில் சந்தித்து நிறைய ஆலோசனைகளை பெற்றதாக குர்பாஸ் கூறியுள்ளார். அந்த ஆலோசனைகளே, தான் சிறப்பாக செயல்பட காரணம் என தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"நான் எப்போதும் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரிடம் எப்படி என்னுடைய கிரிக்கெட்டை முன்னேற்றுவது என்பது பற்றி பேசுவேன். விராட் பாயிடம் என்னுடைய பயணம், எப்படி நான் வளர வேண்டும் மற்றும் எப்படி அடுத்த லெவலை எட்ட வேண்டும் என்பதை பற்றி பேசினேன். அந்த ஆலோசனைகள்தான் நான் சிறப்பாக செயல்பட காரணம்.

இந்தியாவுக்கு எதிரான தொடர் எங்களுக்கு நிறைய பாடங்களை கொடுத்தது. குறிப்பாக 2 முறை சூப்பர் ஓவர் நடைபெற்றது போன்ற போட்டிகள் நடக்க வேண்டும். நாங்கள் அந்த போட்டியில் மகிழ்ச்சியுடன் விளையாடி நிறைய பாடங்களை கற்றுக்கொண்டோம். அத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு எதிராக விளையாடியது எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும் பாடத்தையும் கொடுத்தது. எனவே வருங்காலங்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாட எங்களுக்கு நிறைய தொடர்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.


Next Story