மும்பை கேப்டன் ஹர்திக்: எதிர்மறை கருத்துகள் ஆச்சரியமளிக்கிறது - ஏபி டிவில்லியர்ஸ்


மும்பை கேப்டன் ஹர்திக்: எதிர்மறை கருத்துகள் ஆச்சரியமளிக்கிறது - ஏபி டிவில்லியர்ஸ்
x
தினத்தந்தி 16 Dec 2023 12:58 PM GMT (Updated: 16 Dec 2023 2:21 PM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ரோகித் சர்மா. இவர் தலைமையிலான மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

இதனிடையே, மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார். அவரை சமீபத்தில் குஜராத் அணியிடமிருந்து அதிக தொகைக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் வசம் சென்றார்.

இந்த சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது.

அதேவேளை, கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது மும்பை அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அணி நிர்வாகத்தின் மீதான ஆட்சேபத்தை வெளிப்படுத்தும் வகையில் மும்பை அணியின் சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டது தொடர்பாக எழும் எதிர்மறை கருத்துகள் ஆச்சரியமளிப்பதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், பெங்களூரு அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில், ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை அவரும் நீண்டகாலமாக மும்பை அணியை சேர்ந்தவர்தான். அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து மும்பை வீரர்தான்.

மும்பை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போதெல்லாம் ஹர்திக், ரோகித் சர்மாவுடன் இருந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா வேறு அணிக்கு சென்றபோது சூர்யகுமாரும், பும்ராவும் மும்பை அணிக்கு விசுவாசமாக தொடர்ந்து அந்த அணியிலேயே இருந்தனர் என்பது புரிகிறது. ஆனால், ஹர்திக் மும்பைக்கு வந்துவிட்டார். ஆனால், மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதற்கு எதிர்மறை கருத்துகள் வருவதை கண்டு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூகவலைதள பக்கத்தை பின்பற்றுவதை 10 லட்சம் பேர் நிறுத்திவிட்டனர், ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர் என்பது குறித்த செய்திகளை அறிந்தேன்.

ஹர்திக் பாண்ட்யா திரும்பி வந்ததற்கு மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஹர்திக் குஜராத் அணிக்காக 2 தொடர்களில் விளையாடி ஒன்றில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் என்பது எனக்கு தெரியும். மற்றொரு தொடரில் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. தற்போது ஹர்திக் மிகுந்த அனுபவம் மிக்க வீரராகவும், கேப்டனாகவும் வந்துள்ளார். ஆகையால், ஹர்திக்கை மும்பை ரசிகர்கள் வரவேற்க வேண்டும். அணி வீரர்களுடன் இணைந்து வரும் ஐபிஎல் தொடரில் கோப்பையை ஹர்திக் கைப்பற்றினால் ரசிகர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்பது எனக்கு தெரியும்' என்று கூறினார்.


Next Story