'பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வேண்டும்'- ஆகாஷ் சோப்ரா
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மும்பை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற கண்டிப்பாக ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
அதற்கான காரணம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. "பேட்டிங் செய்யும் இடத்தில் எதிர்கொள்ளும் பந்துக்கு சமமான ரன்களை மட்டுமே எடுக்கக் கூடியவர் தாக்கூர். இருப்பினும் பேட்டிங்கில் 8-வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுவதாக அணி விரும்புவதாலேயே அவர் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் அணியில் முகமது ஷமி இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். மேலும் தாக்கூர் அல்லது ஷமி ஆகியோரில் யார் விளையாட வேண்டும் என்ற விவாதங்கள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. அதைப்பற்றி நானும் விவாதித்து ஷமி விளையாடுவதை விரும்புகிறேன்.
ஆனால் அணி நிர்வாகம் 8வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்கள். இருப்பினும் பொதுவாகவே 8-வது இடத்தில் விளையாடுபவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. ஒருவேளை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் தொடர்ந்து அவரை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் என்னை பொறுத்த வரை அந்த இடத்தில் விளையாடுபவருக்கு பெரும்பாலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது. எனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.