'அவர் ஒரு நேஷனல் ஹீரோ' சி.எஸ்.கே.நட்சத்திர வீரரை புகழ்ந்த நிக்கோலஸ் பூரன்


அவர் ஒரு நேஷனல் ஹீரோ சி.எஸ்.கே.நட்சத்திர வீரரை புகழ்ந்த நிக்கோலஸ் பூரன்
x
தினத்தந்தி 20 April 2024 11:53 AM IST (Updated: 20 April 2024 12:03 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - சென்னை அணிகள் மோதின.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரகானே, ஜடேஜா மற்றும் எம்.எஸ். தோனியின் பொறுப்பான ஆட்டத்தினால் 176 ரன்கள் அடித்தது. அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கிய எம்.எஸ். தோனி வெறும் 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணி வலுவான நிலையை எட்ட உதவினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கே.எல். ராகுல் 82 ரன்களும், டி காக் 54 ரன்களும், பூரன் 23 ரன்களும் அடித்து எளிதான வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

அதனால் இப்போட்டியில் தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு தோனியின் ஆட்டம் மட்டுமே ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் கடைசி 2 ஓவரில் களமிறங்கிய அவர் 28 (9 பந்துகள்) ரன்களை அடித்த அவர் அற்புதமான பினிஷிங் கொடுத்தார். அதை விட சென்னை அணிக்கு போட்டி நடக்கும் அனைத்து நகரங்களிலும் தோனிக்கு ரசிகர்கள் உச்சகட்ட வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இப்போட்டியில் சேப்பாக்கமா அல்லது லக்னோவா என்று யோசிக்கும் அளவுக்கு தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து ஆதரவு கொடுத்தனர். அத்துடன் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது 124 டெசிபல் சத்தம் பதிவாகும் அளவுக்கு ரசிகர்கள் உச்சகட்ட ஆரவாரம் செய்து வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் எம்எஸ் தோனி இந்தியாவின் நேஷனல் ஹீரோ என்று நிக்கோலஸ் பூரன் வியப்புடன் பாராட்டியுள்ளார். இது பற்றி போட்டி முடிந்ததும் அவர் பேசியது பின்வருமாறு:-

"இந்த சீசன் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் தோனி பேட்டிங் செய்ய வரும்போது களத்திலும் களத்திற்கு வெளியேயும் மஞ்சள் கடல் பெருகியிருக்கும். அதை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு நேஷனல் ஹீரோ. பிரையன் லாரா விளையாடிய காலகட்டத்தில் நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் பிரையன் லாராவின் பெரிய ரசிகர்கள். ஆனால் தற்போது அவரை போன்ற ஒருவரை பார்ப்பது நன்றாக இருக்கிறது. தோனியுடன் களத்தில் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவருடன் களத்தை பகிர்ந்து கொண்ட இந்த தருணங்களை எங்களுடைய குழந்தை மற்றும் பேரக்குழந்தையிடம் சொல்வோம்" என்று கூறினார்.


Next Story