ராஜஸ்தான் அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது...முதல் இடத்திற்கு முன்னேறிய பட்லர் - எத்தனை முறை தெரியுமா..?
ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் சாதனையப் பட்லர் படைத்தார்.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ரன்னும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்னும் எடுத்தனர். ஆர்.சி.பிக்கு எதிராக பட்லர் நேற்று அடித்த சதத்தின் மூலம் ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்த ஜோஸ் பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றதன் மூலம் பட்லர் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு (11 முறை) முன்னேறி உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரகானே (10 முறை) 2ம் இடத்திலும், யூசுப் பதான் மற்றும் ஷேன் வாட்சன் (9 முறை) 3ம் இடத்திலும் , சஞ்சு சாம்சன் (8 முறை) 4ம் இடத்திலும் உள்ளனர்.
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள் விவரம்;
ஜோஸ் பட்லர் - 11 முறை
ரகானே - 10 முறை
யூசுப் பதான் - 9 முறை
ஷேன் வாட்சன் - 9 முறை
சஞ்சு சாம்சன் - 8 முறை