சாலை விபத்தில் சிக்கிய நபரின் உயிரை காப்பாற்றிய முகமது ஷமி; வைரலான வீடியோ
ஒரு முறை எங்களுடைய டிராக்டரை ஓட்டி சென்று குளத்தில் விட்டேன். என்னுடைய தந்தை திட்டி விட்டார் என கூறியுள்ளார்.
நைனிடால்,
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி. வலது கை வேகப்பந்து வீச்சாளர். தன்னுடைய பந்து வீச்சால் பல பேட்ஸ்மேன்களை போட்டி நடைபெறும் களத்தில் வீழ்த்தியவர். அவர் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்.
சம்பவம் நடந்தபோது, நைனிடாலில் மலை பகுதியில், ஷமியின் வாகனத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென்று வழியில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
உடனடியாக ஷமி மற்றும் வேறு சிலர் ஓடி சென்று அந்த காரில் இருந்த நபரை வெளியே இழுத்து கொண்டு வந்தனர். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் ஷமி, வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், அவர் அதிர்ஷ்டக்காரர். கடவுள் அந்த நபருக்கு 2-வது முறையாக வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். நைனிடால் அருகே, மலை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தோம் என பதிவிட்டு உள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த காலங்களில் பைக்குகள், கார்கள், டிராக்டர்கள், பஸ் மற்றும் லாரிகள் ஆகியவற்றையும் ஓட்டியிருக்கிறேன் என கூறினார்.
பயணம் செய்வது மற்றும் மீன் பிடித்தல் எனக்கு பிடிக்கும். வாகனங்கள் நிறைய ஓட்டுவேன். பைக் மற்றும் கார்கள் ஓட்டுவது பிடிக்கும். இந்தியாவுக்கு விளையாடிய பின்னர், பைக் ஓட்டுவதனை நான் நிறுத்தி விட்டேன். நெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டுவேன்.
சில சமயங்களில் என்னுடைய தாயாரை சந்திக்க கிராமத்திற்கு செல்வேன் என தெரிவித்து உள்ளார். என்னுடைய பள்ளி நண்பர்களில் ஒருவரின் வீட்டில் லாரி இருந்தது. அதனை ஓட்டும்படி என்னிடம் கூறினான். அப்போது நான் சிறுவனாக இருந்தேன். அதனை நான் ஓட்டினேன்.
அதன்பின் ஒரு முறை எங்களுடைய டிராக்டரை ஓட்டி சென்று குளத்தில் விட்டேன். என்னுடைய தந்தை திட்டி விட்டார் என கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட தொடங்கிய பின்னர் பைக் ஓட்டுவது குறைந்து விட்டது என அவர் கூறுகிறார்.