மும்பை அணி பிளவுபட்டுள்ளது, குழுவாக செயல்படவில்லை - ஆஸி. முன்னாள் கேப்டன்


மும்பை அணி பிளவுபட்டுள்ளது, குழுவாக செயல்படவில்லை - ஆஸி. முன்னாள் கேப்டன்
x

மும்பை அணி பிளவுபட்டுள்ளது, குழுவாக செயல்படவில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரில் இதுவரை 47 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா 2வது இடத்திலும், சென்னை 3வது இடத்திலும், ஐதராபாத் 4வது இடத்திலும் உள்ளன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஒவ்வொரு அணியும் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன.

புள்ளிப்பட்டியலில் பெங்களூரு கடைசி இடத்தில் உள்ளது. அதேவேளை முன்னாள் சாம்பியனான மும்பை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்விகளை அடைந்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, பிற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளை வைத்தே மும்பையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், மும்பை அணி பிளவுபட்டுள்ளது, குழுவாக செயல்படவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிளார்க் கூறியதாவது, மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் என நான் நினைக்கவில்லை. இந்த ஐ.பி.எல். தொடர் முழுவதும் மும்பைக்கு இது ஆசையாக இருக்கும் என்று நினைக்கிறேன். களத்தில் நாம் பார்ப்பதை விட இன்னும் நிறைய விஷயங்கள் மும்பை அணிக்குள் நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இவ்வளவு சிறப்பான வீரர்களை வைத்துக்கொண்டு இதுபோன்று நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியாது.

மும்பை அணி பிளவுபட்டுள்ளது என நினைக்கிறேன். மும்பை அணிக்குள் வெவ்வேறு குழுக்கள் உருவாகியிருக்கலாம். ஏதோஒன்று சரியில்லை. அவர்கள் குழுவாக செயல்படவில்லை. ஒரு அணியாக விளையாடவில்லை. ஐ.பி.எல். போன்ற மிகப்பெரிய தொடர்களை வெல்ல நீங்கள் அணியாக செயல்படவேண்டும். தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடக்கூடாது. துரதிஷ்டவசமாக மும்பை அணியாக விளையாடவில்லை. அவர்கள் விரைவாக வெற்றிமுகத்திற்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். ஆனால், ஐ.பி.எல். கோப்பையை மும்பை வெல்லும் என்று நினைக்கவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story