நள்ளிரவு 2:30 மணிக்கு எனக்கு மெசேஜ் அனுப்பி... - ரோகித் உடனான சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த சாவ்லா


நள்ளிரவு 2:30 மணிக்கு எனக்கு மெசேஜ் அனுப்பி... - ரோகித் உடனான சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த சாவ்லா
x

image courtesy: AFP

பியூஷ் சாவ்லா கேப்டனாக ரோகித் சர்மா எப்படிப்பட்ட அணுகுமுறையை கொண்டவர் என்பது குறித்து தற்போது சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் தோனிக்கு பின் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வென்ற 2வது கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்தார். அதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.

இப்படி வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் ரோகித்துடனான தங்களது உறவு குறித்து பேசி வரும் வேளையில் பியூஷ் சாவ்லா கேப்டனாக ரோகித் சர்மா எப்படிப்பட்ட அணுகுமுறையை கொண்டவர் என்பது குறித்து தற்போது சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது திடீரென நள்ளிரவு 2:30 மணிக்கு எனக்கு மெசேஜ் அனுப்பி விழித்துக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே ஆம் என்று மெசேஜ் செய்தேன். உடனே நேரடியாக என்னுடைய அறைக்கு வந்த அவர் ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்து நாளைய போட்டியில் இதுதான் உன்னுடைய பந்துவீச்சு திட்டம். நீ டேவிட் வார்னருக்கு எதிராகவும் மற்ற வீரருக்கு எதிராகவும் எப்படி பந்துவீச வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். இது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார். இப்படி ஒரு அணியின் வெற்றிக்காக எந்நேரத்திலும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கக்கூடியவர் ரோகித் சர்மா.

ரோகித் சர்மாவுடன் நான் நிறையவே கிரிக்கெட் ஆடி இருக்கிறேன். அதனால் அவருக்கும் எனக்குமான நட்பு என்பது ஆழமான ஒன்று. களத்திற்கு வெளியேவும் நாங்கள் பல நேரங்களில் கலந்துரையாடியுள்ளோம். நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையில் கூட டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடினால் அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு போட்டியின் சூழல் எளிதாக மாறும் என்பதால் அதிரடியான துவக்கத்தை அளித்தார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக மட்டுமே யோசிக்க கூடியவர்" என்று கூறினார்.


Next Story