ஒருவேளை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் 2011 ஒருநாள் உலகக்கோப்பை...-கம்பீர்


ஒருவேளை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் 2011 ஒருநாள் உலகக்கோப்பை...-கம்பீர்
x

வாய்ப்பு கிடைத்தால் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக தாமே பினிஷிங் செய்ய விரும்புவதாக கம்பீர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சச்சின், சேவாக் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். மறுபுறம் நிலைத்து விளையாடிய கவுதம் கம்பீருடன் சேர்ந்த கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். குறிப்பாக முரளிதரனை எதிர்கொள்வதற்காக யுவராஜ்-க்கு முன்பே களமிறங்கிய அவர் தொடர் முழுவதும் தடுமாறிய போதிலும் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளருக்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ள இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியது பின்வருமாறு:- " எப்போதும் ரசிகர்களுக்காக சிறப்பாக செயல்படுவதை பற்றி நினைப்பேன். என்னுடைய கேரியரின் நடுப்பகுதியில் இந்தியாவுக்காக 6 போட்டிகளில் கேப்டனாக செயல்படும் கவுரவம் கிடைத்தது. மற்றபடி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஏனெனில் தொடரின் கேப்டனாக செயல்படுவது என்னுடைய வேலையில்லை. என்னுடைய நாட்டை வெற்றி பெற வைப்பதே எனது வேலை. எந்த அணிக்காக விளையாடினாலும் அவர்களை வெற்றி பெற வைப்பது என்னுடைய வேலை.

இருப்பினும் 2011 உலகக்கோப்பை பைனலை நான் பினிஷிங் செய்திருக்க விரும்புகிறேன். அங்கே யாரோ ஒருவரிடம் பொறுப்பை விடுவதை விட பினிஷிங் செய்ய வேண்டியது என்னுடைய வேலையாக இருந்தது. ஒருவேளை டைம் மெஷின் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அங்கே நான் சென்று எவ்வளவு ரன்கள் அடிக்கிறேன் என்பதை தாண்டி வெற்றியை கொடுக்கும் கடைசி ரன்னை அடிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.


Next Story