டி.என்.பி.எல்: சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி
டி.என்.பி.எல் முதல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
சேலம்,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான அணியாக விளங்குகிறது.
இந்த நிலையில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. சேலத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சச்சின் 63 ரன்களையும், முகிலேஷ் 31 ரன்களையும் குவித்தனர். சேப்பாக் தரப்பில் அபிஷேக் தன்வர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணியின் தொடக்க விரிஅர்களாக சந்தோஷ் குமார், ஜெகதீசன் களமிறங்கினர். சந்தோஷ் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். ஜெகதீசன் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த கேப்டன் பாபா அபராஜித் மற்றும் ரஞ்சன் பால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபராஜித் 38 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ரஞ்சன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டைய்டு அவுட் முறையில் வெளியேறினார். அடுத்துவந்த பெர்னாண்டோ 2 ரன்னிலும் ஜிதேந்திர குமார் 14 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேப்பாக்கை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.