வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் இன்று மோதல்


வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. அதாவது வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 14 லீக் ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. லக்னோ அணியில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டான் டி காக் (502 ரன்கள்), லோகேஷ் ராகுல் (537 ரன்கள்) சூப்பர் பார்மில் உள்ளனர். கொல்கத்தா அணிக்கு எதிரான முந்தைய லீக்கில் இருவரும் ஆட்டம் இழக்காமல் தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். மிடில் வரிசையில் தீபக் ஹூடா (406 ரன்கள்) கைகொடுக்கிறார். ஆனால் ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்காதது அந்த அணிக்கு சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் அவேஷ்கான், மொசின் கான், ரவி பிஷ்னோய், ஜாசன் ஹோல்டர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

பெங்களூரு அணியை எடுத்துக் கொண்டால் 14 ஆட்டங்களில் 8 வெற்றி, 6 தோல்வியுடன் 18 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தை பெற்று 'பிளே-ஆப்' சுற்றை எட்டியது. பேட்டிங்கில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (443 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளார். விராட்கோலி கடந்த லீக் ஆட்டத்தில் 73 ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பியது அந்த அணிக்கு உற்சாகம் அளிக்கும். தினேஷ் கார்த்திக் கடைசி கட்ட அதிரடியில் மிரட்டுகிறார். மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது ஆகியோரும் பேட்டிங்குக்கு வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் ஹசரங்கா (24 விக்கெட்), ஹேசில்வுட் (15 விக்கெட்) சிறந்த நிலையில் இருந்தாலும் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் ஹர்ஷல் பட்டேல் (18 விக்கெட்) ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

ஐ.பி.எல். கோப்பையை ஒரு முறை கூட வெல்லாத பெங்களூரு அணியினர் அதற்கான வாய்ப்பில் நீடிக்க தீவிரம் காட்டுவார்கள். ஏற்கனவே தொடக்க லீக்கில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் பெங்களூரு வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் இறங்குவார்கள். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் லக்னோ ஆயத்தமாவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

லக்னோ: குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜாசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, மொசின் கான், அவேஷ்கான், ரவி பிஷ்னோய்.

பெங்களூரு: விராட்கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், ஷபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல் அல்லது ஆகாஷ் தீப், ஹசரங்கா, ஹேசில்வுட், முகமது சிராஜ்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story