லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கேண்டி அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த காலே டைட்டன்ஸ்...!
காலே டைட்டன்ஸ் அணியின் டிம் செய்பர்ட் அதிரடியாக ஆடி 74 ரன்கள் குவித்தார்.
கொழும்பு,
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் காலே டைட்டன்ஸ் - பி-லவ் கேண்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் காலே டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
காலே அணி தரப்பில் ஷெவோன் டேனியல், லசித் குரூஸ்புல்லே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் ஷெவோன் 25 ரன், குரூஸ்புல்லே 11 ரன், அடுத்து களம் இறங்கிய பானுகா ராஜபக்சே 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய டிம் செய்பர்ட் அதிரடியில் மிரட்டினார்.
இந்த அதிரடி ஆட்டத்தால் காலே அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. செய்பர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் காலே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. காலே அணி தரப்பில் செய்பர்ட் 39 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பி-லவ் கேண்டி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சண்டிமால் ரன் எதுவும் எடுக்காமலும் (௦), தானுகா தபாரே 12 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய காமிந்து மெண்டிஸ் 3 ரன், மேத்யூஸ் 2 ரன், ஹசரங்கா 9 ரன், ஆசிப் அலி 3 ரன், ஆமெர் ஜாமெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
கேண்டி அணியின் பேட்ஸ்மேன்கள் காலே அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கேண்டி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் காலே அணி 83 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
காலே அணி தொடர்ச்சியாக பெற்ற 2வது வெற்றி இதுவாகும். அதே வேளையில் கேண்டி அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.