ஒரு நாள் போட்டியில் அதிக சதத்தில் தெண்டுல்கரை நெருங்கும் கோலி..!


ஒரு நாள் போட்டியில் அதிக சதத்தில் தெண்டுல்கரை நெருங்கும் கோலி..!
x

image courtesy: AFP

ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சின் தெண்டுல்கரை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவையாகும்.

புனே,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. வங்காளதேச அணியில் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் ஓய்வு அளிக்கப்பட்டது. அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது கழற்றி விடப்பட்டார். இவர்களுக்கு பதிலாக நசும் அகமது, ஹசன் மக்முத் சேர்க்கப்பட்டனர். கேப்டன் பொறுப்பை நஜ்முல் ஹூசைன் ஷன்டோ கவனித்தார்.

'டாஸ்' ஜெயித்த வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி தன்சித் ஹசன், லிட்டான் தாஸ் அந்த அணியின் இன்னிங்சை தொடங்கினர். பும்ரா, முகமது சிராஜியின் சீற்றத்தில் ஆரம்பத்தில் சற்று தடுமாறினர். தன்சித் ஹசன் 6 ரன்னில் இருந்த போது, பும்ராவின் பந்துவீச்சில் வெளியேறி இருக்க வேண்டியது. துல்லியமாக காலுறையில் பட்ட பந்துக்கு இந்திய தரப்பில் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யவில்லை. டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது. கண்டம் தப்பிய தன்சித் ஹசன் அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் 5 ஓவர்களில் 10 ரன் மட்டுமே எடுத்த வங்காளதேசம் அடுத்த 5 ஓவர்களில் 53 ரன்கள் திரட்டி வியக்க வைத்தது. இதில் பும்ரா, ஷர்துல் தாக்குர் ஓவர்களில் தன்சித் சிக்சர் பறக்க விட்டதும் அடங்கும்.

வங்காளதேசத்துக்கு அருமையான தொடக்கம் தந்த இந்த கூட்டணியை ஸ்கோர் 93-ஐ எட்டிய போது (14.4 ஓவர்) குல்தீப் யாதவ் உடைத்தார். அவரது பந்து வீச்சில் தன்சித் (51 ரன், 43 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த பொறுப்பு கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (8 ரன்), மெஹிதி ஹசன் (3 ரன்) நிலைக்கவில்லை. மறுமுனையில் அரைசதத்தை கடந்த லிட்டான்தாஸ் 66 ரன்களில் (82 பந்து, 7 பவுண்டரி) ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

மிடில் வரிசையில் முஷ்பிகுர் ரஹிம் (38 ரன், 46 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), மக்முதுல்லா (46 ரன், 36 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கணிசமான பங்களிப்பை வழங்கி 250-ஐ கடக்க உதவினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேசம் 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் 257 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் கால்பதித்தனர். முதல் ஓவரில் 2 பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கிய இவர்கள் வங்காளதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். வலுவான அஸ்திவாரம் அமைத்த இவர்கள் ஸ்கோர் 88 ரன்களாக (12.4 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தனர். ஹசன் மக்மூத் பந்துவீச்சில் சிக்சர் ஓடவிட்ட ரோகித் சர்மா (48 ரன், 40 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) 'ஷாட்பிட்ச்'சாக வந்த அடுத்த பந்தையும் எல்லைக்கோட்டைக்கு விரட்ட முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார். 2-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த விராட் கோலி 2 ரன், பவுண்டரி, சிக்சருடன் கணக்கை தொடங்கி ரசிகர்களை மகிழ்வித்தார். இன்னொரு பக்கம் சுப்மன் கில் 53 ரன்களில் ( 55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அவரை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் (19 ரன்) நிலைக்கவில்லை.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் இணைந்து அணியின் வெற்றிப்பாதையை எளிதாக்கினர். அபாரமாக மட்டையை சுழற்றிய கோலி இலக்கை நெருங்கிய சமயத்தில் சதத்தை குறி வைத்து விளையாடினார். வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட போது அவரது செஞ்சுரிக்கு 3 ரன் தேவையாக இருந்தது. இறுதியில் பிரமாதமான ஒரு சிக்சருடன் சதத்தை ருசித்து, இலக்கையும் எட்ட வைத்து ரசிகர்களை குதூகலத்தில் மிதக்க வைத்தார். அவருக்கு இது 48-வது சதமாகும். உலகக் கோப்பை போட்டிகளில் 3-வது செஞ்சுரியாகும்.

இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 261 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. விராட்கோலி 103 ரன்களுடனும் (97 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), ராகுல் 34 ரன்களுடனும் (34 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 4 ஆட்டத்திலும் இந்தியா இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்திருப்பது சிறப்பம்சமாகும். வங்காளதேசத்துக்கு 3-வது தோல்வியாகும். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது.

போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த விராட் கோலி, "ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை தட்டிப்பறித்ததற்காக வருந்துகிறேன். உலகக் கோப்பையில் சில அரைசதங்கள் அடித்துள்ளேன். அதைபெரிய ஸ்கோராக மாற்றி, இந்த முறை ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய விரும்பினேன். அதை செய்து காட்டியிருக்கிறேன்" என்று கூறினார்.

103 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு இது 48-வது ஒரு நாள் போட்டி சதமாகும். ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை (49 சதம்) சமன் செய்ய இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவையாகும். தெண்டுல்கரின் சாதனையை இந்த உலகக் கோப்பை தொடரிலேயே தகர்த்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் 3-வது இடத்தில் ரோகித் சர்மா (31 சதம்) உள்ளார்.


Next Story