'மோசமான பேட்டிங்கால் தோல்வி கண்டோம்' - கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா புலம்பல்
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக பேட்டிங் செய்ததால் தோல்வி கண்டோம் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்தார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை துவம்சம் செய்து 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் எளிதாக இலக்கை எட்டிப்பிடித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (98 ரன்கள், 47 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் சஞ்சு சாம்சன் (48 ரன்கள், 29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆகியோர் கடைசி வரை நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர். 7-வது தோல்வியை சந்தித்த கொல்கத்தாவின் அடுத்த சுற்று வாய்ப்பு பட்டுபோனது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் 2 வீரர்கள் புதிய சாதனை படைத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் விளாசி புதிய சாதனை படைத்து வியக்க வைத்தார். இது ஐ.பி.எல். போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக பதிவானது. அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். அவர் முதல் விக்கெட்டை சாய்த்த போது ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சாஹல் 187 விக்கெட்டுகளுடன் (143 ஆட்டம்) முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் ரன்-அவுட் ஆன ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லருக்கு (0) நடத்தை விதிமுறையை மீறியதாக போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டநாயகன் விருது பெற்ற 22 வயதான ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்) கூறுகையில், 'நான் எப்பொழுதுமே சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்று நினைப்பேன். கடைசி வரை நிலைத்து நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எனது நோக்கத்தை இந்த ஆட்டத்தில் நிறைவேற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து நான் வருத்தப்படவில்லை. அணியின் நிகர ரன் ரேட்டை உயர்த்துவது தான் எனது மனதில் இருந்தது. ஆட்டத்தை விரைவில் முடிப்பது குறித்து தான் நானும், கேப்டனும் (சாம்சன்) பேசினோம். ஜோஸ் பட்லர் ரன்-அவுட் ஆனது போன்று ஆட்டத்தில் நடக்க தான் செய்யும். அதன் காரணமாக நான் கூடுதல் பொறுப்புடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டேன். அந்த ரன்-அவுட் குறித்து சிந்திக்காமல் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு கேப்டன் அறிவுறுத்தினார். ஐ.பி.எல். போட்டி என்னை போன்ற இளம் வீரர்கள் திறமையை நிரூபிக்கவும், கனவுகளை நிறைவேற்றவும் நல்லதொரு அடித்தளமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.
தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கருத்து தெரிவிக்கையில், 'ஜெய்ஸ்வால் ஆடிய விதத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். இது அவருடைய நாளாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த ஆட்டத்தில் எங்களுடைய பேட்டிங் நன்றாக அமையவில்லை. அதுவே எங்களுடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஜெய்ஸ்வால் இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்தி அவரை வீழ்த்தி விடலாம் என்று நினைத்து நான் முதல் ஓவரை (முதல் ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்) வீசினேன். ஆனால் ஜெய்ஸ்வால் அருமையாக ஆடி எங்களது திட்டத்தை முறியடித்து விட்டார்' என்றார்.