உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் வீரராக இமாலய சாதனை படைத்த ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
முல்தான்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் க்ராவ்லி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து தேநீர் இடைவேளை வரை 70 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ரூட் 119 ரன்னுடனும், ஹாரி புரூக் 64 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தில் ரூட் 27 ரன் எடுத்த போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் வீரராக இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ரூட் தற்போதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5092* ரன்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் (3094 ரன்) 2ம் இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் (3486 ரன்) 3ம் இடத்திலும் உள்ளனர்.