பாதுகாப்பாக இருங்கள்...சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் வேண்டுகோள்
சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சென்னை,
`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம், தேவைப்பட்டால் உயரமான இடத்தில் பாதுகாப்பாக இருங்கள்.நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால், நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதையோ பரிசீலிக்கவும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம்.
இவ்வாறு வார்னர் கூறினார்.