ஐ.பி.எல்: லக்னோ அணியில் இருந்து விலகி மீண்டும் பழைய அணிக்கு திரும்பும் கே.எல்.ராகுல்?
லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
புதுடெல்லி,
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது. இதனால் ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் உரிமையாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. மெகா ஏலத்தை முன்னிட்டு பல வீரர்கள் அணி மாற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் தனது பழைய அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டு பிளெஸ்சிஸ்-க்கு பதிலாக புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் எனவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் லக்னோ தோல்வி கண்டது.
இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதனால் கே.எல்.ராகுல் லக்னோ அணியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2013 மற்றும் 2016ம் ஆண்டு ஐ.பி.எல் சீசன்களில் கே.எல்.ராகுல் பெங்களூரு அணிக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.