ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியதன் உண்மை காரணம் என்ன? - ஹாரி புரூக் விளக்கம்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரிலிருந்து ஹாரி புரூக் விலகினார்.
லண்டன்,
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கடந்த ஐ.பி.எல். மினி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் அறிவித்தார். இவரது விலகல் டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பாட்டி இயற்கை எய்தியதால் தற்சமயத்தில் நன்றாக விளையாடும் மனநலையில் இல்லை என்று ஹாரி புரூக் கூறியுள்ளார். அதனாலயே ஐ.பி.எல். 2024 தொடரில் இருந்து விலகி உள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு:-
"எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதில்லை என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளதை உறுதி செய்கிறேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நான் அங்கு சென்று விளையாடுவதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். இந்த முடிவிற்கான காரணம் என்ன என்று பலரும் கேட்பார்கள் என்பது தெரியும். எனவே அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த மாதம் என்னுடைய பாட்டியை நான் இழந்தேன். அவர் எனக்கு ஆதரவாக இருந்தவர். குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியை அவருடைய வீட்டில் கழித்தேன். என்னுடைய வாழ்க்கையின் அணுகுமுறை மற்றும் கிரிக்கெட் வாழ்க்கையை அவரும் என்னுடைய மறைந்த தாத்தாவும்தான் வடிவமைத்தனர். இங்கிலாந்துக்காக நான் விளையாடியதை அவர் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டில் நான் வென்ற சில விருதுகளை அவர் சேகரித்து மகிழ்ச்சியுடன் இருந்தது எனக்கு பெருமையானதாகும்" என்று கூறினார்.