ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்.. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ மோதல்

இரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஜெய்ப்பூர்,
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோத உள்ளன.
கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் முதுகெலும்பு போன்றவர்கள்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் இந்த சீசனிலும் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ரோமன் பவெல் ஆகியோரும் பேட்டிங்கில் அசத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் வலுசேர்க்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு அணியை வழிநடத்துகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அவரது உடல் தகுதி அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், தேவ்தத் படிக்கல், கைல் மேயர்ஸ், ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரனும், பந்து வீச்சில் ஷமார் ஜோசப், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக்கும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததாக விளங்கினாலும், உள்ளூர் அனுகூலத்தால் ராஜஸ்தான் அணியின் கை ஓங்கலாம் என்று நம்பப்படுகிறது.
இரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு அந்த பொறுப்புக்கு கடந்த 2 சீசனாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா கொண்டு வரப்பட்டுள்ளார். ரோகித் சர்மா ஒரு வீரராக அணியில் தொடருகிறார்.
கேப்டன்ஷிப் மாற்றத்தால் எழுந்த சர்ச்சையை புறந்தள்ளிவிட்டு மும்பை அணி இந்த போட்டிக்கு முழு வீச்சில் தயாராகி இருக்கிறது. மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்டாததால் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஆடமுடியாதது அந்த அணிக்கு இழப்பாகும். சமூக வலைதளத்தில் கிளம்பிய சலசலப்பு மற்றும் சர்ச்சையால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு இந்த முறை எகிறி இருக்கிறது. மும்பை அணி, கடந்த 11 ஆண்டுகளாக தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டதில்லை. அந்த மோசமான சாதனையை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தனது அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று வியப்பளித்த குஜராத் டைட்டன்ஸ் கடந்த ஆண்டு மயிரிழையில் கோப்பையை கோட்டைவிட்டது. ஹர்திக் பாண்ட்யா, அணி தாவியதை அடுத்து குஜராத் அணிக்கு சுப்மன் கில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாகும். சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்க குஜராத் அணியும், முதல் ஆட்டத்தை பொறுத்த வரையில் தங்களது மோசமான சாதனையை மாற்ற மும்பை அணியும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.