ஐ.பி.எல்; காயம் காரணமாக பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறிய முன்னணி வீரர்கள்


ஐ.பி.எல்; காயம் காரணமாக பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறிய முன்னணி வீரர்கள்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

கவுகாத்தி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி விட்டன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது. டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோற்றதன் மூலம் ராஜஸ்தான் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்தது.

வரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்களான சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அந்த அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் (ஐதராபாத்துக்கு எதிராக) இடம் பெற மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அந்த அணிக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி வீரர்களான பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இன்று நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலே இடம் பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் அணியின் தொடக்க லீக் ஆட்டங்களில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தவான் காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சாம் கர்ரன் பொறுப்பு கேப்டனாக அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story