ஐ.பி.எல்.: கோப்பையை வெல்ல பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதாது - டி வில்லியர்ஸ்
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்ல பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதாது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
கேப்டவுன்,
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதற்கு மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் அந்த அணியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தி உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த சூழ்நிலையில் குஜராத்துக்கு முதல் வருடத்திலேயே கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தது போல் மும்பைக்கும் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதாது நல்ல வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். மேலும் காயத்தால் கடந்த ஐ.பி.எல். தொடரில் விலகிய ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணிக்காக மீண்டும் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
"ஹர்திக் பாண்ட்யா மீண்டும் கம்பேக் கொடுப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவசியமானதாகும். இல்லையெனில் பார்ப்பதற்கு வலுவாக தெரிந்தாலும் உண்மையாக அவர்களின் அணியில் பேலன்ஸ் இருக்காது. இம்முறை ஹர்திக் பாண்ட்யா மிகப்பெரிய வேலையை செய்வார் என்று நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் ஒரு ஆல் ரவுண்டராகத்தான் அதிகமாக தேவைப்படுகிறார். பாண்ட்யா கேப்டனாக ம்ட்டுமின்றி நல்ல வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டால்தான் மும்பை கோப்பையை வெல்லும்.
பும்ரா இம்முறை பந்து வீசுவதை பார்ப்பதற்கு நான் காத்திருக்கிறேன். சமீபத்திய டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அவர் அபாரமாக செயல்பட்டார். எனவே கடினமான சூழ்நிலையில் உங்களுடைய அணிக்கு பும்ரா தேவைப்படுவார். பல தருணங்களில் அவர் உங்களுக்காக அசத்துவார். அவர் வேலையை கச்சிதமாக செய்து பெரிய விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்" என்று கூறினார்.