ஐ.பி.எல். கிரிக்கெட்: இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய விதிமுறைகள்
ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐ.பி.எல். நிர்வாகம் இந்த முறை கொண்டு வந்துள்ளது.
சென்னை,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்த சீசனில் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐ.பி.எல். நிர்வாகம் இந்த முறை அறிமுகப்படுத்தி உள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 2-வது பவுன்சர் வீசினால் நோ-பாலாக அறிவிக்கப்படும். இனி 3-வதாக வீசப்படும் பவுன்சரே நோ-பால் ஆகும். இது பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்.
கள நடுவர்கள் முடிவுகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி மைதானத்தில் உள்ள நவீன 8 ஹாக்-ஐ கேமராவின் காட்சிகள் டி.வி. நடுவருக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்காக அந்த ஒளிப்பதிவு காட்சிகளை கையாளுவதற்கு இரு நிபுணர்கள் டி.வி. நடுவர் அறையிலேயே இருப்பார்கள். இதனால் நடுவரால் சீக்கிரமாக முடிவுகளை எடுக்க முடியும்.
மேலும் கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறை (இம்பேக்ட் விதி) நடப்பு தொடரிலும் தொடருகிறது. இன்னிங்சின் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை இறக்கி விளையாட வைக்கும் இம்பேக்ட் விதி இந்த ஆண்டும் தொடருவது சிறப்பானதாகும்.