ஐ.பி.எல். 2025: அந்த விதிமுறை தொடர வேண்டும் - பி.சி.சி.ஐ.க்கு அஸ்வின் கோரிக்கை


ஐ.பி.எல். 2025: அந்த விதிமுறை தொடர வேண்டும் - பி.சி.சி.ஐ.க்கு அஸ்வின் கோரிக்கை
x

இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பிரச்சினை ஏற்படுவதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

சென்னை,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பிரச்சினை ஏற்படுவதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அத்துடன் விராட் கோலி முதல் டேவிட் மில்லர் வரை பலரும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இல்லாமல் போயிருந்தால் ஷிவம் துபே, துருவ் ஜுரேல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். எனவே அந்த விதிமுறை தொடர வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை வைக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இம்பேக்ட் பிளேயர் விதிமுறை ஏன் மோசமாக கருதப்படுகிறது. ஏனெனில் அது ஆல் ரவுண்டர்களுக்கு ஊக்கமளிப்பதில்லை என்ற விவாதங்கள் காணப்படுகின்றன. உண்மையில் அவர்களை யாரும் தடுக்கவில்லை. தற்போதைய தலைமுறையில் பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்வதில்லை. எனவே அந்த விதிமுறை ஆல் ரவுண்டர்களை ஊக்கப்படுத்தவில்லை என்று அர்த்தமல்ல. கவுண்டி தொடரில் அசத்தும் வெங்கடேஷ் ஐயரை பாருங்கள். அது விளையாட்டில் நியாயமான புதுமையை கொண்டு வரும் மற்றொரு வாய்ப்பாகும். ராஜஸ்தானுக்கு எதிராக ஐதராபாத் 175-9 என்ற நிலையில் சபாஷ் அகமதை இம்பேக்ட் வீரராக கொண்டு வந்தது.

அப்போது 23 ரன்கள் அடித்த அவர் மேட்ச் வின்னரானார். பனி காரணமாக போட்டிகள் ஒருதலைபட்சமாக மாறும்போது உங்களுக்கு எக்ஸ்ட்ரா பவுலிங் வாய்ப்பு கிடைக்கிறது. அதே போல பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் கிடைக்கிறார். எனவே இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இல்லாமல் போயிருந்தால் சபாஷ் அகமது, ஷிவம் துபே, துருவ் ஜுரேல் ஆகியோர் வாய்ப்பு பெற்றிருக்க மாட்டார்கள். அது மட்டுமே வீரர்களை வளர்ப்பதற்கான வழி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த விதிமுறை மோசமானதல்ல" என்று கூறினார்.


Next Story