ஐ.பி.எல்.2025: இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நீக்கப்படுமா..? மெகா ஏலம் நிறுத்தப்படுமா..? ஜெய்ஷா பதில்


ஐ.பி.எல்.2025: இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நீக்கப்படுமா..? மெகா ஏலம் நிறுத்தப்படுமா..? ஜெய்ஷா பதில்
x

இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பிரச்சனை ஏற்படுவதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

மும்பை,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன. அத்துடன் பெரும்பாலான அணிகள் மெகா ஏலத்திற்கு பதிலாக சிறிய ஏலம் மட்டும் நடைபெற வேண்டும் என்று சென்னை, மும்பை அணிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் அதற்கு பெங்களூரு, டெல்லி போன்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அத்துடன் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பிரச்சனை ஏற்படுவதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அத்துடன் விராட் கோலி முதல் டேவிட் மில்லர் வரை பலரும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்படுமா? மெகா ஏலம் நிறுத்தப்படுமா? என்ற கேள்விகளுக்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா பதில் அளித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சமீபத்திய மீட்டிங்கில் நாங்கள் அணி நிர்வாங்களுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். இம்பேக்ட் வீரர் விதிமுறையில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. ஆல் ரவுண்டர்களின் பங்கு குறைவது அதனுடைய பாதகமாக இருக்கிறது. ஒரு எக்ஸ்ட்ரா இந்திய வீரர் வாய்ப்பு பெறுவது அதனுடைய சாதகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யும் ஒளிபரப்பாளர்களையும் நாங்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் ஒரு நிர்வாகியாக எனக்கு விளையாட்டு பெரியது. அதைப் பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்வோம்.

அதே போல மெகா ஏலம் பற்றி அனைவரிடமும் கருத்து கேட்டுள்ளோம். அதனுடைய இறுதி முடிவு எங்களிடம் உள்ளது. நன்கு செட்டிலாகிய அணிகள் மெகா ஏலத்தை விரும்பவில்லை. செட்டிலாகாத அணிகள் மெகா ஏலத்தை விரும்புகின்றன. இருப்பினும் ஒரு ரசிகனாக நிலைத்தன்மை முக்கியமானது என்று நினைக்கிறேன். ஆனால் அதை அவ்வப்போது மாற்றுவது விளையாட்டை சுவாரசியமாக்கி வளர்க்க உதவுகிறது" என்று கூறினார்.


Next Story